17ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், பாஜக கூட்டணி கட்சிகளோடு 283 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சியை தக்கவைப்பதற்கான சூழல் நிலவியுள்ளது.
இந்நிலையில், தங்களை வெற்றிபெற வைத்ததற்காக, பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து, தொண்டர்களை சந்தித்தனர். மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றிப் பெற்ற பிரமதர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு கரகோஷங்களுடன் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து கௌரவித்தனர்.
பின்னர் தொண்டர்களிடையே பேசிய அமித் ஷா, "கடந்த ஐந்து ஆண்டுக் கால சிறப்பான ஆட்சிக்கு மக்கள் எங்கள் மீது காட்டிய அன்புதான் இந்த வெற்றி. இந்தத் தேர்தலில் பாஜகவின் வெற்றி, 11 கோடி தொண்டர்களான உங்களது வெற்றி. இந்தியாவில் அரை நூற்றுாண்டுக்கு பின், தற்போதுதான் ஒருகட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரும்பாண்மையான வெற்றியை பெற்றுள்ளது. சாதிக் கட்சிகளுடன் இனி பாஜக கூட்டணி வைக்கப் போவதில்லை. பல்வேறு வன்முறைகள் மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்தபோதிலும், அங்கு பாஜக 18 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. விரைவில் மேற்குவங்கத்திலும் பாஜக கொடி பறக்கும்" என்றார்.