புதுக்கோட்டை அருகேவுள்ள வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட வடசேரிப்பட்டி கிராமத்தில் அந்த ஊராட்சிக்குட்பட்ட 10 ஏக்கர் பரப்பளவிலான அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தங்கள் ஊராட்சி மக்களுக்காக பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்ட வேண்டுமென அக்கிராம மக்கள் ஏற்கனவே ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த இடத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 528 தொகுப்பு வீடுகள் கட்டி அதனை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிசை மாற்று வாரிய அலுவலர்களின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்.22) குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்ட ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், லாரிகள், கட்டுமான பொருள்களை அந்த இடத்திற்கு கொண்டு சென்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் டிஎஸ்பி சுப்பிரமணியன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொதுமக்களின் போராட்டத்தையும் மீறி காவல் துறையினர், ஜேசிபி வாகனத்தை உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஜேசிபி இயந்திரம் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும், தங்களின் விவசாய இடத்தை பாழாக்க இந்த வீடுகளை கட்ட முயற்சிப்பதாகவும், இங்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டப்பட்டால் இதனை சுற்றியுள்ள சுமார் 500 ஏக்கருக்கும் மேலான தங்களின் விவசாய நிலம் நாசமாகிவிடும் என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அலுவலர்களின் துணையோடுதான் தங்கள் ஊராட்சிக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்து வீடுகளை கட்ட முயற்சிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஊராட்சியில் எந்தவித தீர்மானமும் நிறைவேற்றாத நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் வீடுகளை கட்ட முனைவது சட்ட விரோத செயல், உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்னையில் தலையிட்டு இந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறு பணிகளை நிறுத்தாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அக்கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களோடு காவல் துறை, அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.