தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட 32 பஞ்சாயத்து தலைவா்கள் கூட்டமைப்பினர் ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 10) மனு அளித்தனா்.
அந்த மனுவில், "கடந்த டிசம்பர் மாதம் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கபட்ட பின் ஊராட்சிமன்றத்திற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை. கரோனா காலத்திற்கு பஞ்சாயத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 பஞ்சாயத்துகளுக்கும் இதுவரை நிதி ஒதுக்கீடு வழங்கவில்லை.
கிராமப்புறங்களில் பல்வேறு பணிகளை செய்துள்ள நிலையில் அதற்கான நிதி கிடைக்கவில்லை. ஒரு ஊராட்சிக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் கரோனா நிதியை வழங்க வேண்டும். மேலும், 14, 15ஆவது நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்திலேயே ஒப்பந்தம் கோரப்படுகிறது.
அந்தப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் 20 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த ஊராட்சிக்கும் நிதி வந்து சேரவில்லை.
முதல் தவணையாக ஐந்து லட்சத்திற்கு மட்டுமே பணி செய்ய முடியும் எனக் கூறி அதற்கான பணி பட்டியலை கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஊராட்சி மன்றங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துத்துள்ளனர்.