இது தொடர்பாக பி.சி.டி.பியின் நிர்வாக இயக்குநர் ராய் மன்சூர் நசீர் கூறுகையில், "பாகிஸ்தான் எதிர்ப்பு உள்ளடக்கங்களைக் கொண்ட பல்வேறு பாடப்புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. நூல்களின் பொய்யான, அவதூறான உள்ளீடுகளைக் கொண்ட 100க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் தேச தந்தை நிறுவனர் காயிட்-இ-ஆசாம் முஹம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் தேசியக் கவி அல்லாமா முஹம்மது இக்பால் ஆகியோர் குறித்த பிழையான செய்திகள், பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் நாட்டின் வரைபடத்தில் இடம்பெறாமல் இருப்பது போன்ற பல ஆட்சேபகரமான செய்திகள் இருப்பதைக் கண்டறிந்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, அவற்றை சீர்செய்யும் விதமாக நீக்கியுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட சுமார் 10,000 புத்தகங்களை 30 குழுக்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 100க்கும் மேற்பட்டவை ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், லிங்க் இன்டர்நேஷனல் பாகிஸ்தான், பாராகான் புக்ஸ் ஆகியவற்றால் வெளியிடப்பட்டவை. குறிப்பாக, இந்த நூல்களில் ஆட்சேபகரமான உள்ளடக்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
இந்த புத்தகங்களை சந்தையில் இருந்து பறிமுதல் செய்ய வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானிய குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த நாடு குறித்த தவறான ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை கற்பிப்பதை அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் மற்ற பாடப்புத்தகங்களை முழுமையாக ஆய்வு செய்வோம்" என அவர் கூறினார்.