ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த நால்ரோட்டில் பாஜக கட்சியைச் சேர்ந்த 100 பேர் மாநில கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அரசு பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்றால் கண்பார்வை பாதிக்கப்படும் என்பதால், தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு நடந்துவருகிறது.
தற்போது 10 தொலைக்காட்சிகள் தயாராக இருக்கின்றன. மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்குத் தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி ஈரோடு வரும் முதலமைச்சர் , கல்விதுறையின் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
நீட்தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு பள்ளி மாணவர்கள் வருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தவுடன் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது”. எனத் தெரிவித்தார்.