சென்னை கொத்தவால்சாவடி சின்னதம்பி தெருவில் வசித்து வருபவர் சர்தார் ஹுசைன். இவருக்கு ரிவினா பாத்திமா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி வீட்டின் படுக்கை அறையில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, குழந்தை திடீரென்று அருகிலிருந்த தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மயக்கமடைந்து இருந்த குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து, சிகிச்சை பெற்று வந்த குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொத்தவால்சாவடி காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தையின் பெற்றோர், எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த சுமார் 50 நபர்கள் குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் என கொத்தவால்சாவடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். ஆனால் கொத்தவால்சாவடி காவல் ஆய்வாளர் அதனை ஏற்க மறுத்து, உடற்கூறாய்வு செய்த பின்பு உடல் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து சென்றதாகக் கூறப்படுகிறது.