கடந்த மே 20ஆம் தேதியன்று நேபாள அரசின் மேலாண்மை, கூட்டுறவு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் அந்நாட்டின் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது.
இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை நேபாளத்திற்கு சொந்தமானதாகக் கூறிய இந்த புதிய வரைபடம், உலகளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை இந்திய அரசு அப்போதே கடுமையாகக் கண்டித்திருந்தது.
இந்நிலையில், இன்று புதிய எல்லை வரையறை சட்டத்திற்கான முன்வரைவை நேபாளத்தின் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான சிவமயா தும்பாங்கே, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது இந்தியாவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்ட முன்வரைவு மீதான முடிவை எடுக்க அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று முடிந்ததை அடுத்து இது நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய எல்லையை சட்டப்பூர்வமானதாக அறிவிக்க அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்ற சூழலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் இந்த கூட்டத்தொடரில் பங்கு பெற்று ஆதரித்துள்ளனர்.
மேலவையில் வெற்றிப் பெற்ற இந்த சட்ட முன்வரைவை, கீழவையின் அமர்வில் வெற்றிபெற வைக்க மேலும் பத்து இடங்கள் தேவைப்படுகின்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் புதிய எல்லை வரையறை சட்டத்தை ஆதரித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்திக்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், “முற்றிலும் இயற்கைக்கு புறம்பாக இந்தியாவின் நிலப்பரப்பை யாரும் உரிமைக்கோர அனுமதிக்க முடியாது. இவ்வாறு நேபாள அரசு விரிவுபடுத்தி வெளியிட்டுள்ள புதிய எல்லை வரைவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்ரமணியம் இது குறித்து பேசுகையில், "நேபாள அரசு, இந்தியாவினுடைய இறையாண்மையை மதிக்க வேண்டும். எல்லைப் பிரச்னையில் வெளிப்படும் நேர்மைத் தன்மையை பின்பற்ற வேண்டும். நேபாளத்திடம் நாங்கள் சிறந்த நட்புறவுடன் இருக்க விரும்புகிறோம். பேச்சு வார்த்தையின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.
நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி இது குறித்து பேசுகையில், "நடந்து கொண்டிருக்கும் சர்ச்சை புதியதல்ல. 1816ஆம் ஆண்டு சுகோலி உடன்படிக்கையின்கீழ், நேபாள மன்னர் தனது பிரதேசத்தின் சில பகுதிகளை பிரிட்டாஷாரிடம் இழந்தார். தற்போது அவற்றின் மீதான உரிமையை உறுதி செய்ய முனைகிறது. நேபாள அரசு, தன்னுடைய முடிவை இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னரே எடுக்க தீர்மானித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு எல்லையில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க நினைக்கும் சீனாவின் ஆதரவு, நேபாளத்திற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தியாவிற்கு சொந்தமான லிம்பியாதுரா, லிபுலேக், கலாபானி ஆகிய பகுதிகளை தங்களுக்கு சொந்தமானதாக குறிப்பிட்டு நேபாள அரசின் இந்த செயல்பாட்டால் இரு நாட்டு தூதரக உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ம.பி.யில் மருத்துவர் ஒருவர் கரோனாவால் உயிரிழப்பு!