இதுகுறித்து, பொது பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இரண்டு மாதங்களுக்கு மேல் ஊரடங்கில் முடங்கிக் கிடக்கும் மாணவர்களுக்கு நோய் தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் சூழலில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்துவது சாத்தியமற்றது. தேர்வு எழுத விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. அனைத்துத் தரப்பினரின் கருத்திற்கும் மதிப்பளித்து, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு, பதினொன்றாம் வகுப்பில் ஒரு பாடத்திற்கான பொதுத்தேர்வு ஆகியவற்றை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இக்கோரிக்கையை அரசிடம் வலுவாக முன்வைத்த அனைவருக்கும் எங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள், மக்களின் கோரிக்கையை, அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. கட்சி அரசியலைக் கடந்து மாணவர் நலன் சார்ந்து ஒன்றுபட்டு மக்களின் கோரிக்கைக்கு ஆதரவு குரல் எழுப்பிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கல்வித்துறையில் மாநில அரசின் உரிமையைக் காத்திடவும், அகில இந்தியத் திறன் அறியும் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்ற நிலை உருவாவதைத் தடுத்திடவும், "நீட்" தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முழு விலக்குப் பெற்றிட உரிய சட்ட மசோதாக்களைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிடவும் இத்தகைய ஒற்றுமை உணர்வுடன் தமிழ்நாட்டு மக்களுடன் ஓரணியில் நின்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை விழைகிறது” என குறிப்பிட்டுள்ளார்.