கள்ளக்குறிச்சியிலிருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியை இளங்கோவன் என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே லாரி சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
இதனைக் கண்ட பின்னால் வந்த லாரி ஓட்டுநர்கள், லாரியில் தீப்பற்றியிருப்பது குறித்து இளங்கோவனுக்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக லாரியை நிறுத்திய அவர், தீயை அணைப்பதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை செய்துள்ளார்.
ஆனால், பஞ்சு லோடு என்பதால் தீ மளமளவென லாரி முழுவதும் பரவி, முழுவதும் எரிந்து நாசமாகின. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். எனினும். இத்தீவிபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 டன் பஞ்சுடன் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இதுதொடர்பாக மங்களபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.