கோவை மாநகரின் தடாகம் சாலையில் அமைந்துள்ள முத்தண்ணன் குளம் பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற சில நாள்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.
அகற்றப்படும் வீடுகளில் உள்ள மக்களை குடிசை மாற்று வாரியக் கட்டடத்தில் குடியமர்த்தும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்ததிருந்தது. இதனையடுத்து, நேற்று (ஜூன் 6) மாநகராட்சி நிர்வாகம் அங்கிருந்த குடிசைகளை இடித்து அப்புறப்படுத்தியது.
இந்நிலையில், இரண்டாம் நாளாக இன்றும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடிசைகளை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் வந்தபோது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மக்கள் திடீரென சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர்.
குடிசை மாற்று வாரியத்தின் டோக்கன் வழங்கப்படாமல் மக்களின் வீடுகளை இடிப்பதைக் கண்டித்து, உடனடியாக டோக்கன் வழங்கி குடிசை மாற்று வாரியத்தில் அவர்களுக்கான இடங்களை ஒதுக்க வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் குடிசை மாற்று வாரியத்தில் அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும், அதே சமயம் தாங்கள் வசித்த இந்த இடத்திலேயே புதிதாக வீடுகள் கட்டி தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ள இந்த பகுதியில் 900 மக்களுக்கே மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன் வழங்கப்படாத மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தருகிறோம் என்று மாநகராட்சி நிர்வாக அலுவலர்கள் கூறினர். ஆட்சியரிடம் டோக்கன் வழங்கப்படாத மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர மாவட்ட ஆட்சியர் உறுதியளிக்க வேண்டுமென நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதில் கட்டாயமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எண்ணி கலைகிறோம்" என தெரிவித்தார்.