ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. இக்கோயிலைச் சுற்றி நடைபெற்றுவரும் கிரிவலப் பாதைப் பணியை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் பார்வையிட்டார். மேலும், கிரிவலப் பாதை பணிகள் நடைபெற்று வருவது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "மாநகராட்சி சார்பாக இரண்டு கிலோமீட்டர் கிரிவலப் பாதை அமைக்கும் பணிகள் 90 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். கரோனா நோய்த்தொற்றினால் நிறுத்தி வைக்கப்பட்ட வேலை தற்போது நடைபெற்று வருகிறது. அதனை ஆய்வு செய்வதற்காக தற்போது வந்துள்ளேன்.
கிரிவலப்பாதையில் பதிக்கப்படும் கற்கள் அனைத்தும் பழைய கற்களாக காணப்பட்டது. அதனைப்பற்றி அலுவலர்களிடம் கேட்டபோது மீனாட்சி அம்மன் கோயிலில் புதிய கற்கள் பதிப்பதால், பழைய கற்கள் அகற்றப்பட்டது. அந்தக் கற்களை தற்போது இங்கே கிரிவலப் பாதைக்கு பயன்படுத்துவதாக கூறினர்.
கிரிவலப் பாதை என்பது சாலையை விட உயரமாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது சாலைக்கு நிகரான வடிவில் அமைந்துள்ளது. சில இடங்களில் சாலையை விட பள்ளமாக காணப்படுகிறது.
எதற்கு இவ்வாறு உள்ளது என அலுவலர்களிடம் கேட்டால், தேர் செல்லும்போது பக்தர்கள் தடுக்கிவிழுந்து விடுவார்கள் எனக் காரணம் கூறுகிறார்கள்.
நடைபெறும் பணிகளுக்கு மதிப்பீட்டுப் பலகை இல்லை. கிரிவலப் பாதை அமைக்கும் இடங்களில் மின்சார கம்பங்கள் அதிக அளவில் இருக்கிறது.
கிரிவலப் பாதை அமைக்கும் பணி திருப்திகரமாக இல்லை. முழு வேலை முடிவடையாத நிலை இருப்பதால், மக்களுக்கு ஏற்றார்போல் மாற்றம் செய்துகொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வேறு இடத்தில் வேண்டாமென்று தூக்கிப்போட்ட கற்களை வைத்து, இங்கு பணிகள் நடைபெறுவது கடவுளை அவமரியாதை செய்யும் செயல்" என்றார்.