இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தாதுமணல் கொள்ளையைத் தடுக்க, பெருங்கனிமக் கொள்கை வகுக்கப்படும் என்று 2013ஆம் ஆண்டு அறிவித்த அதிமுக அரசு, கூறியபடி செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது.
அரசே தாதுமணல் எடுத்து விற்பனை செய்யும் பணியை மேற்கொள்ளும் என்று 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்து விட்டு அதையும் மறந்து, இன்றுவரை அதற்கான பணிகளை முடுக்கிவிடாமல், யாருக்காகவோ காத்திருப்பதும், காலம் தாழ்த்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
தாது மணல் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயைப் பெருக்கி, கரோனா பேரிடர் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு அறிக்கை அளித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது.
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட “கார்னட் மெகா ஊழல்” குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைத்தார்.
அந்தக் குழு ஆய்வு செய்து, அளித்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
தொடர்ச்சியான இந்தக் கொள்ளைக்கு எல்லாம் காரணம் என்று, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசாலும், ஏன் மத்தியில் உள்ள பாஜக அரசாலும், குற்றம் சாட்டப்பட்ட வைகுண்டராஜன் மீதான வழக்குகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தாது மணல் முறைகேடுகள் குறித்த அனைத்து வழக்குகளையும் அதிமுக அரசு முனைப்புடன் நடத்தாமல், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் தாதுமணல் விற்பனையை 7 வருடமாக தொடங்காதது, மாநில அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, தாது மணல் உற்பத்தி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட முயற்சி செய்கிறோம் என்றும், சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் கொள்கை விளக்கக் குறிப்புகளில் அதிமுக அரசு வெறும் ஒப்புக்காகக் கூறி வருகிறது.
இதுதவிர இன்றுவரை, தாது மணலை எடுத்து விற்க, எந்த ஆக்கப்பூர்வமான முயற்சியையும் முதலமைச்சர் பழனிசாமி எடுக்கவில்லை.
தொழில் துறை முதலீடுகளை ஈர்க்கப் போடப்படும் வழக்கமான “வெற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” போலவே, தாது மணல் விற்பனையிலும், ஏதோ உள்நோக்கத்துடன், தொடர்ந்து கபட நாடகம் ஆடி வருகிறது.
தாது மணல் கொள்ளையில் “மெகா ஊழல் நடந்திருக்கிறது என்று கூறி, குழு ஒன்றைப் போட்டு விசாரித்த அதிமுக அரசு, இன்றுவரை வைகுண்டராஜனைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது ஏன்? எதை எதிர்பார்த்து? முதலமைச்சர் பழனிசாமிக்கும், தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் உறவுகள் என்ன? அதற்காக நடந்துள்ள பேரம் என்ன?
ஆகவே, தற்போது ஏறக்குறைய 5 லட்சம் கோடியைத் தொட்டு விட்ட மாநில அரசின் நிதி நெருக்கடியை மனதில் கொண்டு, தாது மணல் உற்பத்தி செய்ய டாமின் நிறுவனத்திற்கு உடனடியாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அந்தப் பணிகளை விரைவுபடுத்தி, அரசுக்கு வர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை, இந்த நிதி நெருக்கடி நேரத்திலாவது பெறுவதற்கு, நேர்மையான முயற்சிகளை வெளிப்படையாக, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
தாது மணல் கொள்ளை குறித்து அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள், அது தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்திட வேண்டும். இந்தப் விவகாரத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மதிப்பிலான தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் கரோனா ஊரடங்குகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார - நிதி நெருக்கடி போன்றவற்றை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையை, தமிழ்நாடு மக்களுக்கு உடனடியாக வெளியிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.