ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேளாண்மை துறை சார்பில் கூட்டுப்பண்னை திட்டத்தின் மூலம் 100 விவசாயிகள் கொண்ட 35 உழவர் உற்பத்தியாளர்கள் குழுகளுக்கு ரூ. 2.10 கோடி மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் குழுக்களுக்கும் தலா ரூ.5 லட்சம் மானியத்துடன் டிராக்டர் டில்லர் உள்ளிட்ட பண்ணை இயந்திரக் கருவிகள் வழங்கும் விழா இன்று (ஜூலை 4) நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், மானியத்துடன் கூடிய டிராக்டர் டில்லர் உள்ளிட்ட பண்ணை இயந்திர கருவிகளை வழங்கினர்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், "கரோனா நெருக்கடி காலத்திலும் தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களின் நலனிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது.
அதேபோல, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றது. கோபிசெட்டிப்பாளையத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள விவசாய கருவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் உழவுப் பணியை மேற்கொண்டு நல்ல மகசூலைப் பெற வேண்டும்" என்றார்.