சென்னை புளியந்தோப்பு பாடிசன்புரம் லைன் தெருவில் இறைச்சி வியாபாரிகள் சங்க அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் உள்ளே இருந்த பீரோவை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் உடைத்து, அதிலிருந்த ரூ.61.50 லட்சம் பணத்தைக் கடந்த 21ஆம் தேதி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையனைத் தேடி வந்துள்ளனர். குறிப்பாக கொள்ளை நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், காவல் துறையினர் கொள்ளையரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் ஏற்கெனவே அந்தப் பகுதியில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று(ஜூன் 29) புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சாலமன் (20) என்ற இளைஞரைப் பிடித்து விசாரிக்கும்போது குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.மேலும் பெரம்பூரைச் சேர்ந்த சபி(19) என்ற இளைஞரும் இணைந்து கொள்ளை அடித்தது தெரியவந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த ரூ. 39 லட்சம் பணம் மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்திய இரும்புக்கம்பி, கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நூற்பாலையில் பயங்கர தீ விபத்து- 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம்!