கோவை மாவட்டம், சாய்பாபா காலனி பகுதியில் இயங்கி வந்த அண்ணா காய்கறி சந்தையில் பாதி கடைகள் கரோனா காரணமாக, தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்தது.
இந்த சந்தைக்கு குத்தகைதாரராக காளியப்பன் என்பவர் இருக்கிறார். காளியப்பன் அங்குள்ள வியாபாரிகளிடம் அலுவலர்கள் பெயரை பயன்படுத்தி அதிக தொகை வாங்கியதாக வியாபாரிகள் கூறிவந்தனர்.
இந்நிலையில், தற்போது கடைகளை மீண்டும் சாய்பாபா காலனி பகுதிக்கே மாற்ற அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறி ஒவ்வொரு கடைக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வசூலித்து வருகிறார்.
இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாய்பாபா காலனி மார்க்கெட்டில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.