தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதுதொடர்பாக விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நீதித்துறை நடுவரைக் காவல் துறையினர் தரக்குறைவாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. சம்பந்தப்பட்ட காவல் துறையினரின் இச்செயலை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலரும் கண்டித்துவருகின்றனர்.
இந்நிலையில், தேனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிபதியை அவதூறாகப் பேசிய காவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி - மதுரை சாலையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பளர் அலுவலக நுழைவாயிலில் நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து மீண்டும் ஊர்வலமாக வந்த வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.