கிருஷ்ணகிரி மாவட்டம், அருகேயுள்ள வகாப் நகரைச் சேர்ந்தவர் லத்தீப். இவருக்கு நான்கு மனைவிகள். இவர் இறந்துவிட்டார். இவரது சொத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், முதல் மனைவியின் மகனான, கட்டிகானப்பள்ளி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவிகளுடைய வாரிசுகளின் சுவாதினத்தில் இருந்த ஐந்து ஏக்கர் நிலத்தை அடியாட்களின் உதவியோடு அபகரித்துக்கொண்டார்.
மேலும், இதைத் தட்டிக்கேட்ட பஷீர் அகமதுவை தாக்கி, கீழே தள்ளி, இருசக்கர வாகனத்தை அவரது காலின் மேல் ஏற்றியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த பஷீர் அகமது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது நிலத்தை அபகரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். தன்னை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பஷீர் அகமது புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, முன்னாள் பஞ்சாயத்து தலைவரான அகமது, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இன்று இணைத்துக்கொண்டார்.