கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்வேறு வகையான மாவட்ட, மாநில விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து, தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
அந்த வகையில் எப்போதும்போல் நேற்று (செப்.19) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தடகளப் பயிற்சியாளர் ஒருவர் பாக்சிங் பயிற்சி மேற்கொண்டிருந்த ஆண் ஒருவரை பலமாகத் தாக்கினார். தொடர்ந்து, இச்சம்பவத்தை நேரில் கண்ட நடைபாதையில் சென்று கொண்டிருந்த பொது மக்கள், அலறியடித்து ஓடினர்.
இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சம்பந்தப்பட்ட பிரச்னை நீங்கள் கூறிதான் தெரிகிறது, இது தொடர்பாக நான் விசாரிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் இது குறித்து மைதானத்தில் இருந்த பெயர் வெளியிட விரும்பாத மாணவர் ஒருவர் கூறும்போது, “தடகளப் பயிற்சியாளர் எப்போதுமே உடன் இருக்கும் மற்ற போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும் பயிற்சியாளர்கள், பயிற்சி மாணவர்களிடம் தகாத முறையில் பேசுவது, போதைப் பழக்கத்தில் ஈடுபடுவது போன்ற மைதானத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.