கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் தொடர்ந்து இந்து மதக் கடவுளை பற்றி தவறான கருத்துகளைப் பரப்பி வருவதாகவும், கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சனம் செய்து காணொலிகளை வெளியிடுவதாகவும், தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் குற்றம்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தவறான கருத்துகளை கருப்பர் கூட்டம் சேனல் பரப்பி வரும் கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திர நடராஜன் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், தடை செய்யப்பட்ட அமைப்புகளிடமிருந்து தொகையைப் பெற்று வரும் கருப்பர் கூட்டத் சேனலை தடை செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பாக கடந்த 13 ஆம் தேதி புகார் அளித்தனர்.
இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை, கருப்பர் கூட்டம் சேனல் மீது 153 கலகத்தைத் தூண்டுதல்,153 (a) சாதி,மத வெறியை தூண்டி விடுதல், 295 இரண்டு மதங்களுக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று இந்து மத கடவுள்களை பற்றி விமர்சித்ததாகக் கூறி கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த வேளச்சேரி பகுதியில் வசிக்கும் செந்தில்வாசன் (49) என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அறிய முடிகிறது.
கைது செய்யப்பட்ட அவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.