இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது. இதில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 3 லட்சத்து, 32 ஆயிரத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கார்த்தி சிதம்பரம் குறித்த தகவல்கள்
காரைக்குடியை அடுத்த கண்டனூர் கிராமத்தில் 1971-ம் ஆண்டு பிறந்தவர். வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா சிதம்பரம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். பொருளாதார நிபுணர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். அம்மா நளினி சிதம்பரம் பிரபல வழக்கறிஞர். தன்னுடைய ஆறு வயதிலேயே தேர்தல் பூத் கமிட்டியில் சிலிப் எழுதிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டவர்.
இளைஞர் காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எனப் படிப்படியாக உயர்ந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டு நான்காம் இடத்தைப் பிடித்தார். ‘கட்சியின் கொள்கை முடிவின்படி பதவியில் உள்ளவர்கள் யாரும் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கேட்கக் கூடாது' என அறிவித்திருந்தார் ராகுல்காந்தி. இந்த முடிவையே மாற்றி, தன்னுடைய மகனுக்கு மீண்டும் சீட் வாங்கிக் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கியுள்ளார் சிதம்பரம்.