சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும் விமான பயணிகளை விட வெளிமாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை இன்று (ஜூலை20) அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சென்னை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பின்பு கடந்த மே மாதம் 25 ஆம் தேதியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் குறைந்த அளவு உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் சென்னையிலிருந்து வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவும், சென்னை வரும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஒரு நாளில் புறப்பட்டு செல்லும் 30 விமானங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் சென்றனர்.
ஆனால் சென்னைக்கு வரும் விமானங்களில் ஆயிரத்து 300 லிருந்து ஆயிரத்து 400 நபர்கள் மட்டுமே வந்தனர். சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பயந்து சென்னையை விட்டு வெளியேறுகின்றனர் என கூறப்பட்டது.
ஆனால் சமீபகாலமாக கரோனா வைரஸ் சென்னையை விட அதிகமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவ தொடங்கியது அதைப்போல் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரள போன்ற அண்டை மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
ஆனால் புறப்படும் பயணிகளை விட வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த இரண்டு மாதங்களில் முதல் முறையாக இன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பயணிகளை விட வருகை பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து இன்று வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 28 விமானங்களில் சுமார் 2 ஆயிரத்து 300 பயணிகள் சென்னையிலிருந்து செல்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் இன்று சென்னைக்கு வரும் 28 உள்நாட்டு விமானங்களில் 2 ஆயிரத்து 600 பயணிகள் சென்னைக்கு வருவதற்கு முன் பதிவு செய்து உள்ளனர்.
குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, சேலம், ஐதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய இடங்களில் இருந்து அதிகமான பயணிகள் சென்னைக்கு வருகின்றனர்.
இதற்கு காரணம் சென்னையில் கரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்து மற்ற மாவட்டங்களில் அதிகரித்து உள்ளது தான். இதனால் கரோனாவுக்கு பயந்து சென்னையை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் சென்னை திரும்புகின்றனர். அதோடு சென்னையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதால் தான் சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்புமா சென்னை? - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சிறப்புப் பேட்டி!