இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி, ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டோல் நகரில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்கவீரராக களமிறங்கிய இமாம்-உல்-ஹக் 131 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில், 16 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். இதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இளம் வயதில் 150க்கும் அதிகமான ரன்களை விளாசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் 36 வருட சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
தனது 23 வயது 153ஆவது நாளில் இச்சாதனையை அவர் எட்டினார். முன்னதாக, 1983 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அவரது 24 வயதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 175 ரன்கள் அடித்து இச்சாதனையை படைத்தார்.
இமாம்-உல்-ஹக் சதம் விளாசியிருந்தாலும், இப்போட்டியில் இங்கிலாந்து அணி 359 ரன்களை 44.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இதன் மூலம், ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் நாட்டிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளது.