இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏஎஃப்சி ஆசிய கால்பந்துத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய அணி குரூப் சுற்றுடன் நடையைக் கட்டியது. இதனால், 2015ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்த, ஸ்டீபன் கான்ஸ்டான்டின் ராஜினமா செய்தார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி, ஃபிபா கால்பந்து தரவரிசைப் பட்டியலில் 173ஆவது இடத்தில் இருந்து 97ஆவது இடத்தை பிடித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் பயிற்சியளார் பதிவிக்கு விண்ணபத்தவர்களில் நான்கு பேரை மட்டும் இந்திய கால்பந்து சம்மேளனம் தேர்ந்தெடுத்தது. அவர்களுக்கான நேர்காணல் டெல்லியில் உள்ள இந்திய கால்பந்து சம்மேளனம் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதில், குரோஷியா அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான இகேர் ஸ்டிமாக் மட்டும் பங்கேற்றார். நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக அவரது பெயரை இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து, இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப கமிட்டியினர் கூறுகையில்,
"நாங்கள் இகோர் ஸ்டிமாக்கின் பெயரை பரிந்துரை செய்துள்ளோம். தற்போது இதுகுறித்த இறுதி முடிவை இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள்தான் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
1998இல் ஃபிபா உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்த குரோஷியா அணியில் ஸ்டிமாக் இடம்பெற்று இருந்தார். இவர், 2012 முதல் 2013 வரை குரோஷியா அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இவரைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற மூன்று வீரர்களான தென் கொரியாவின் லீ மின் - சங், ஸ்பெயினின் அல்பெர்டோ ரோகா, ஸ்வீடனின் ஹகன் எரிக்சன் ஆகியோர் ஸ்கைப் மூலமாக நேர்காணலில் ஈடுபட்டனர். இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து, இந்திய கால்பந்து சம்மேளனம் நாளை மறுநாள் அதிகார்வபூர்வ அறிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.