புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று (ஜூலை 23) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நிகழ்த்தினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினர்.
அப்போது முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது, "துணை நிலை ஆளுநர் ஆற்றிய உரையானது அரசு இதுவரை செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும், இனி செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் பல கருத்துகளை உள்வாங்கியதாக இருந்தது. இதில் கரோனா காலத்தில் முன்னின்று மக்களுக்கு பணியாற்றிய களப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். பல துறைகளில் புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பல்வேறு சிரமங்களுக்கும் போராட்டங்களுக்கிடையில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தேன்.
புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்தது அதை எதிர்த்து போராடி வருகின்றேன். நியாயம் தான் வெல்லும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் துணை நிலை ஆளுநர் உரையாற்ற வரவில்லை என்றாலும் திட்டமிட்டபடி பேரவையை நடத்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். இதை செய்யவில்லை என்றால் நான் உள்ளிட்ட அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
மதுபான கடைகளுக்கு சீல் வைத்த விவகாரத்தில் தாசில்தார் கார்த்திகேயனை காவல்துறையினர் தாக்கிய விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதி விசாரணை அறிக்கையும் வந்துள்ளது. இதில் தவறு செய்த முதுநிலை காவல் கண்காணிப்பாளரை பாதுகாக்கும் வேலையை ஆளுநர் கிரண்பேடி செய்கிறார். தவறு செய்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.