கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழந்து தங்களது வாழ்வாதாரம் பறிப்போன நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர். ஊரடங்கால் பெருந்துயருற்றிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் தம்மால் ஆன உதவிகளை செய்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரங்களில், பேருந்து நிலையம், வழிப்பாட்டுத் தலங்களில் வசித்துவரும் வறியவர்கள், மனநிலை பாதிப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு கடந்த 85 நாள்களாக காலை, மாலை என இரு வேளையும் முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிதம்பர சபாபதி தனது சொந்த முயற்சியில் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்.
இது மட்டுமின்றி கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவரும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிதம்பர சபாபதியின் மனிதாபிமான செயல் அந்த பகுதியில் பாராட்டப்பட்டு வருகிறது.