சென்னை மீனம்பாக்கம் அடுத்துள்ள நங்கநல்லூர் 13ஆவது தெருவைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பத்துடன் கோயம்புத்தூர் சென்றார். பின்னர் இளவரசன் வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கிரில் கேட், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் இளவரசன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.