புதுச்சேரி தொழிலாளர் துறையின் வேலை வாய்ப்பகத்தின் சார்பில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் தங்களது மேல்படிப்பை தொடங்குவதற்காக, உயர்கல்வி கண்காட்சி புதுச்சேரியில் உள்ள காந்தி திடலில் இன்று மாலை தொடங்கியது. இக்கண்காட்சி இன்று முதல் அடுத்த மாதம் ஜூன் 2ம் தேதி வரை 5 தினங்களுக்கு, மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. இன்று தொடங்கிய கண்காட்சியை தொழிலாளர் துறை அரசு செயலர் ஜவகர் கலந்துகொண்டு தொடக்கி வைத்தார்.
30 அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்தும் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் ,பாலிடெக்னிக், பலதரப்பட்ட 30 கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும், கண்காட்சியில் 30 ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை வல்லுநர்கள் உயர்கல்வி மற்றும் தொழில் முறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் பற்றி உரை கலந்துரையாடல் நடைபெறவுள்ளன. எனவே மாணவர்களும் பெற்றோர்களும் வந்து பயனடையுமாறு தொழிலாளர் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று மாலை தொடங்கி இக்கண்காட்சியினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று சென்றனர்.
.