திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா பெருந்தொற்று எதிரொலியின் காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தாக்கத்தால் கொடைக்கானலில் இயங்கும் வாரச்சந்தை மூடப்பட்டுள்ளதால், வியாபாரிகள் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளதால் அரசு நிர்ணயித்த பகுதிகளில் காய்கறி வியாபாரிகள், கடைகளை அமைத்துள்ளனர். இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில், காய்கறிகள் கொண்டு வர முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனால், கிடைக்கும் சில வகை காய்கறிகளும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. எனவே, கொடைக்கானலில் விற்கப்படும் காய்கறிகள் முறையான விலை பட்டியல் இன்றி நாளுக்கு நாள் ஒரு விலை விற்பதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, இந்த விலை உயர்வைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் முறையான விலை பட்டியலை நிர்ணயிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.