திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெறும். இந்தச் சந்தைக்கு கோபால்பட்டி சுற்று வட்டார பகுதிகளான சாணார்பட்டி, கொசவபட்டி, அஞ்சுகுழிபட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு மற்றும் கோழிகளை விற்பனை செய்ய கொண்டுவருவர்.
இங்கு அதிகப்படியாக ஆடு, கோழி கிடைப்பதால் திண்டுக்கல், தேனி, கம்பம், மதுரை, வேடசந்தூர், எரியோடு, சின்னாளபட்டி, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்கிசெல்வர்.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் செய்யப்பட்டாலும் மக்கள் அதிகமாக கூடும் திரையரங்குகள், திருமண மண்டபங்கள், மால்கள், சந்தைகள் போன்றவற்றை நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கோபால்பட்டியில் அரசு விதித்த விதிமுறைகளை மீறி சாலையின் இரு புறத்திலும் இன்று(ஜூலை 11) கோழிச் சந்தை நடைபெற்றது. ஏற்கனவே கரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நத்தம் தொகுதியில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 10 தினங்களுக்கு முழு கடையடைப்பு நடைபெறும் நேரத்தில், பொது மக்கள் முகக்கவசம் இன்றியும், தகுந்த இடைவெளி இன்றியும் கூட்டமாக சாலையில் நின்று கோழிகளை வாங்கிச் சென்றது தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருந்தது.