தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இம்மலைப் பாதை வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.
திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனத்தை இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனத்தை ஓட்டிவருகின்றனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனி சூழ்ந்துள்ளதால் இரு மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.