தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய் தோற்று அதிகமாகிவருவதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பொது மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆவடி அருகே வீரா புரத்தில் உள்ள தாமரை நகர் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையினரிடம் புகாரளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தாமரை நகர் பகுதியில் பிளம்பர் தொழில் செய்து வரும் நாகலிங்கம் வழக்கம்போல் நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு மாடியில் தூங்கச் சென்றது தெரியவந்துள்ளது.
காலையில் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்த நாகலிங்கம், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 8 சவரன் தங்க நகை மற்றும் 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.