கரோனா காலத்தில் மக்களைக் காக்கத் தவறிய மாநில அரசு, மின் கட்டணம் என்ற பெயரால் கொள்ளையடித்து வருகிறது என்றும் ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள இந்த வேளையில் மின் கட்டணத்தை அதிகப்படுத்தி மக்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு கொள்ளையடிக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதனிடையே, மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலினின் ஆணைக்கினங்க திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தனது சொந்த கிராமமான சே.கூடாலூர் கிராமத்தில் உள்ள வீட்டின் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் செங்கம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி, சே.கூடலூர் ஊராட்சிமன்ற தலைவர் சக்கரவர்த்தி உடனிருந்தனர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தா.வேணுகோபால் தனது சொந்த கிராமமான காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள வீட்டின் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை நகரில் உள்ள தனது வீட்டின் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தனது சொந்த ஊரான தேவனாம்பட்டு கிராமத்தில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது மின் கட்டணத்தை எளிய தவணை முறையில் செலுத்த மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும், கரோனா காலத்தில் மக்களை அதிமுக அரசு வஞ்சிக்க கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.