வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் நபீஸ் இக்பாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் சிட்டிகாங்கில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.
வலது கை பேட்ஸ்மேனான நபீஸ், வங்க தேசத்திற்காக 2003 முதல் 2006ஆம் ஆண்டுவரை விளையாடியுள்ளார். இவர், 11 டெஸ்ட் போட்டிகளிலும், 16 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) கடந்த சில வாரங்களாக விளையாட்டு வீரர்களை அதிக அளவில் பாதித்துவருகிறது. வங்கதேசத்தின் பயிற்சியாளரும் முன்னாள் முதல்தர அணியின் வீரருமான ஆசிக்கூர் ரகுமான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு வங்கதேச வீரரான நபீஸ் இக்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, தவுஃபிக் உமர், சப்ராஸ் ஆகியோர் இந்தத் தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.