திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி ஏரி சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. குப்பநத்தம் அணையிலிருந்து வருகின்ற உபரிநீர் ஏரியில் தேக்கிவைக்கப்பட்டு அதன்மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரிலான விவசாய நிலம் பயன் பெற்றுவருகின்றது.
இந்நிலையில் தோக்கவாடி ஏரியை குடிமராமத்துப் பணிமூலம் தூர்வாரும் பணிக்கான டெண்டர் 96 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டரை வேறு நபருக்கு கொடுத்ததால் விவசாயிகள் ஏற்கனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த டெண்டர் எடுத்தவர்கள் அவர்களைத் தாக்கியதில் விவசாயிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் தற்போது இந்தப் பணியானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது மழைக்காலம் ஆரம்பம் என்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தப் பணியினை உண்மையான விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என வாயில் கறுப்புத் துணி கட்டி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.