இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மத்திய அரசு கரோனா தாக்குதல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முதல் கட்டமாக வங்கிக் கடன் தவணை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் முதல் மே இறுதி வரை ஒத்திவைத்தது. இரண்டாவது கட்டமாக ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை வட்டி தள்ளுபடியுடன் கால நீட்டிப்பு வழங்கியும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் அறிவிப்பு செய்து சுற்றிக்கையும் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியன் வங்கி உள்ளிட்ட ஒரு சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் ஜூன் 30ஆம் தேதி தவணையை திரும்ப செலுத்துவதற்கான கால நீட்டிப்பிற்கான கால அவகாசம் முடிந்து விட்டதாகவும், உடனடியாக காலக்கெடுவுக்குள் செலுத்த தவறினால் வட்டி அபராத வட்டி கணக்கிடப்பட்டு கட்டாய கடன் வசூல் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பி மிரட்டி வருகின்றனர்.
தமிழ் மொழியை புறக்கணித்துள்ளதோடு, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சட்டத்திற்கு புறம்பாகவும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களுக்கு முரணாக மிரட்டி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். உதாரணத்திற்கு மன்னார்குடி இந்தியன் வங்கி கிளை எனக்கும் மற்றும் ஒரே நேரத்தில் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கும் அறிவிக்கை அனுப்பி மிரட்டியதால் பெரும் கூட்டம் வங்கிக்கு படையெடுத்தது.
இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றால் வங்கி ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டதால் வங்கியை மூடி சீலிடப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கு வந்து சென்றவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் அவலமும் ஏற்ப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய, மாநில அரசுகளும், ரிசர்வ் வங்கியும் உரிய நடவடிக்கை எடுத்து வங்கிகளின் சட்டவிரோத கடன் வசூல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி பொதுமக்களையும், விவசாயிகளையும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ’சிறைச்சாலை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை’ - தென்மண்டல ஐஜி