இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது.இப்போட்டியில், இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், கேப்டன் மோர்கன் அதிரடியாக ஆடினார். ஆஃப்கானிஸ்தான் அணியினர் எப்படி பந்துவீசினாலும் அவர் பவுண்டரிகளை விட, சிக்சர்கள் அடிப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தினார்.
மோர்கனின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.71 பந்துகளில் இவர் 17 சிக்சர்கள், நான்கு பவுண்டரிகள் என 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் அதிக சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை மோர்கன் படைத்தார்.
இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டி-வில்லியர்ஸ் (16), இந்திய வீரர் ரோகித் ஷர்மா (16), வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் (16) ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார்.