இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி, நேற்று கிரிக்கெட்டின் மெக்கா எனக் கொண்டாடப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹரன்டார்ஃப் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், 286 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அதேசமயம், இம்முறை உலகக்கோப்பையை வெல்ல ரசிகர்களின் ஃபேவரைட் அணியாக திகழ்ந்த இங்கிலாந்து அணி, தற்போது அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைவது கடினமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹரன்டார்ஃப் கூறுகையில்,
"லார்ட்ஸ் மைதானத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது பெருமையாக இருக்கிறது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்திருந்தாலும், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற அவர்களுக்கு இன்னனும் வாய்ப்புள்ளது. இதனால், உலகக்கோப்பையை வெல்ல அவர்கள் ஃபேவரைட் அணியாகதான் இப்போதும் திகழ்கின்றனர். சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் விளையாடுவதுதான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது" என்றார்.
புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி நான்கு வெற்றி, மூன்று தோல்வி என எட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிச் சுற்றுக்குள் முன்னேற முடியம் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்து அணி தள்ளப்பட்டுள்ளது.