சென்னை, அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தத் தளர்வுகளும் இன்றி அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும் என அரசு தெரிவித்தது.
இந்நிலையில், ஊரடங்கில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மளிகைக் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்த முழு ஊரடங்கிற்கு பொது மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பதாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஊரடங்கில் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், உணவிற்காக உணவகங்களையே பெருமளவு நம்பியுள்ள வெளியூரைச் சேர்ந்த பணியாளர்கள் பலரும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், இதனை அரசு கருத்தில் கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை நகருக்குள் தற்போது இருக்கக் கூடும். இந்நிலையில், உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் இவர்கள் அனைவரும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதில் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் சமைக்கும் வசதிகள் இல்லாத பலரும் தற்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அருகாமையில் உள்ள அம்மா உணவகங்களை நாடிச் சென்றாலும் காவல் துறையினர் அதற்கு அனுமதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை கவனிக்கும் சிறப்பு அலுவலரும் சுகாதாரத்துறை செயலருமான ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "ஆங்காங்கே அம்மா உணவகங்கள் இருக்கின்றன. அங்கே இலவச உணவு மூன்று வேலையும் வழங்கப்படுகிறது. வெளியூர் மக்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்தால் அது குறித்து முழுவதுமாக பரிசீலிக்கப்படும் " எனத் தெரிவித்துள்ளார்.
இன்று நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கைப் போன்று, வரும் 28ஆம் தேதியும் (அடுத்த ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கை அமல்படுத்தும் திட்டத்தில் உள்ள அரசு, அப்போதாவது வெளியூர் பணியாளர்களின் உணவுத் தேவைகளை கருத்தில் கொண்டு, ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்ய முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர், சென்னையில் தங்கிப் பணியாற்றும் வெளியூர் வாசிகள்.
இதையும் படிங்க : இந்திய - சீனப் பிரச்னை: அ முதல் ஃ வரை!