செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இயங்கிவரும் செளபாக்மல் சௌகார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 15ஆம் தேதி நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு ஹால் டிக்கெட், முகக்கவசம் இன்று வழங்கப்பட்டன.
அப்போது மாணவிகளிடம் தலைமையாசிரியர் கூறுகையில், " காலை 10.00 மணி முதல் 1:00 மணிவரை தேர்வு எழுதும் நேரமாகும். தேர்வுக்கு கல்வித் துறை என்ற பெயரில் வரும் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம்.
அப்பேருந்தில் வருபவர்கள் பேருந்து அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை, தேர்வு ஹால் டிக்கெட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயணத்திற்கு பயன்படுத்தலாம்.
தேர்வுக்கு வரும்பொழுது பள்ளி சீருடையில் வர வேண்டும். ஒவ்வொருவரும் பள்ளியின் அடையாள அட்டை இரட்டை ஜடை போன்றவை கண்டிப்பாக அணிய வேண்டும். அதே போல், தேர்வு மையத்திற்கு வரும்போதும் தேர்வு எழுதிவிட்டு வெளியே செல்லும்போதும் கைகளை கழுவிவிட்டு தேர்வு அறைக்கு வரவேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.
பேருந்தை தவறவிட்டவர்கள் இருசக்கர வாகனத்திலும் வரலாம். தேர்வு மையத்திற்கு வருவதற்கு சிறிது கால தாமதம் ஆனாலும் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கலாம் என கல்வித் துறை அறிவித்துள்ளதால் நீங்கள் எந்தவித பதற்றமும் இல்லாமல் பள்ளி மாணவ மாணவிகள் வந்து தேர்வுகள் எழுதலாம்” என்றார்.