கிருஷ்ணகிரி மாவட்ட ’உரிமைக்குரல் ஓட்டுநர் நலச்சங்கம்’ சார்பில், ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "கரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த ஆறு மாத காலமாக நிறுத்தபட்டுள்ள எங்கள் வாகனங்களுக்கு, சாலை வரி, இன்சூரன்ஸ் தொகை, வங்கி மாதத் தவணைகளுக்கு வட்டி ஆகியவை கேட்டு எங்களுக்குக் கடிதம் வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து நான்கு முறை மனு அளித்துள்ளோம்.
ஊரடங்கு காலத்தில் ஓட்டுநர்களாகிய எங்களுடைய வாழ்வாதாரம் அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. எங்களது குடும்பங்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நேரத்தில், நாங்கள் எப்படி வாங்கிய பணத்திற்கு மாதத் தவணையும் வட்டியும் கட்ட முடியும்?
எனவே கேரள மாநில அரசு எப்படி ஓட்டுநர்களுக்கு விலக்கு அளித்துள்ளதோ, அதேபோல் ஆறு மாத காலத்திற்கு எங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும். இதையே தொழிலாக நம்பி உள்ள ஓட்டுநர்களுக்கு இழப்பீடுத் தொகையாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும்.
இதுவரை தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எங்களது ஆறு அம்ச கோரிக்கைக்கு செவி சாய்த்து எங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.
இதே நிலை நீடித்தால் எங்களது வாகனங்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம்" என்று தெரிவித்தனர். இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.