திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு முழுவதுமுள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி நிலவரம் குறித்து கள ஆய்வு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் முன்னெடுப்புகளை வேகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க. பொன்முடி இன்று நேரில் சந்தித்து கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அரசு அலுவலர்களை ஊக்குவித்து, அவர்கள் விழிப்புடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
கரோனா பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த முதலமைச்சர் முன்வரவில்லை. அவர் தொடர்ந்து ‘வாபஸ் மன்னனாகவே’ இருந்துவருகிறார். கரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் உள்ளது. சட்டப்பேரவையில் பேசிய அளவுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படவில்லை. தமிழ்நாடு சுகாதாரத் துறை கோவிட்-19 தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை ஊக்கப்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான மருத்துவம் வழங்கவில்லை.
கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு அளிக்கும் அறிக்கையில் துளியளவும் உண்மை இல்லை. இ-பாஸ் வழங்கும் விஷயத்தை அரசு உடனடியாக முறைப்படுத்த வேண்டும்" என்றார்.