திருவண்ணாமலை நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்த திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமையில் 26 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் விவாதப் பொருளாக, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கரோனா தொற்றின் தாக்கம் குறித்த தற்போதைய நிலை குறித்தும், 15ஆவது நிதிக்குழு நிதியின் கீழ், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிப்பதற்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பது பற்றி வந்திருந்த 26 உறுப்பினர்களோ, ஊராட்சி ஒன்றியத் தலைவரோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை, அது பற்றி கவலைப்படவும் இல்லை எனத் தெரிகிறது.
நடைபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்த கரோனா காலத்தில் கூட்டம் எதுவும் நடத்தக்கூடாது என்பது விதிமுறையாகும். இருப்பினும் எந்த விதமான தடுப்பு நடவடிக்கையும் பின்பற்றாமல் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் 26 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை கலந்து கொண்ட கூட்டம் எந்தவிதமான கரோனா கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் பின்பற்றாமல் நடந்தது, கரோனாவை அதிகரிக்கும் வாய்ப்பாகவே அமைந்தது.
கரோனாவைக் கட்டுப்படுத்த கூட்டம் போடுவதாக அறிவித்துவிட்டு, யார் யாருக்கு எவ்வளவு பணத்தை பங்கு போட வேண்டும் என்பதை மட்டுமே ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து, கூட்டம் நடத்தியதாக திமுக ஒன்றியக் குழுத் தலைவர் கலைவாணி கலைமணி மீது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.