திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1
கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்குத் தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி.
தீர்மானம் 2
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கரூர் நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளைக் கட்ட பொதுமக்களை வற்புறுத்திவருகிறது.
மேலும், குடிநீர் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என அடாவடியில் ஈடுபட்டுவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தீர்மானம் 3
கரூர் மாவட்டத்தில் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு இரண்டாம் தவணை ஊசி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே விரைவாக தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கரோனா நோயாளிகள் அதிகரிக்கும் சூழ்நிலையில் உரிய சிகிச்சை கிடைக்க கூடுதல் படுக்கை வசதிகள், மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை திமுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை திமுக வேட்பாளர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மாணிக்கம் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.