தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகிகள் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், க. பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க முக்கிய காரணம், நம் தியாகிகள்தான். தற்போது இந்த கரோனா காலத்தில் Right time, right decision என்பதுதான் தமிழ்நாட்டின் செயல்பாடு.
தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சி காரணமாக தற்போது தமிழ்நாட்டிற்கு 18 ஆயிரத்து 236 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து போராட்டம் அறிவித்துள்ள திமுக தனது ஆட்சியை நினைத்து பார்க்க வேண்டும்.
எந்த மதமாக இருந்தாலும் மதிக்க வேண்டும். அந்த வகையில், அனைத்திற்கும் போராட்டம் நடத்தும் திமுக, ஒரு மதத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை. கூட்டணி குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் அமைச்சர்கள் பேசுவதாக வந்த தகவல், வதந்தி. எல்லா தலைவர்களும் போற்றக்கூடிய அரசுதான் அதிமுக. யார் தலைவர்களை அவமதித்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
அதேபோல் சென்னையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன் களப்பணியாளர்கள் பணியில் உள்ளனர். சிகிச்சை முகாம்கள் மூலமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்த களப்பணியாளர்களுக்கு அறிவித்த நிவாரணம் உரிய முறையில் வழங்கப்படும்.
கரோனாவை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக தமிழ்நாட்டில் சமூக பரவல் இல்லை. முன்பைவிட தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
அதுமட்டுமின்றி அரசு எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிக்கை விடும் செயல்கள் நடைபெற்றுவருகின்றன. நிபுணர்கள் குழு, உள்ளிட்ட குழுக்கள் நம்மிடம் உள்ளது. எனவே நம்மால் சமூக பரவலை மறைக்க முடியாது. மேலும் சமூக பரவல் ஆகியுள்ளதா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு, ஐ.சி.எம்.ஆர் ஆகியவைதான் கூறவேண்டும்; இதுகுறித்து கூற திமுக தலைவர் ஸ்டாலின் சோஷியல் மெடிசன் படித்துள்ளாரா” என்றார்.