புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை தனி கவனிப்புடன் மையங்களில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கோரிமேடு காவலர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனி கவனிப்பு மையத்தை இன்று (ஏப்.23) துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அந்த மையத்திலுள்ள படுக்கைகள், பிராணவாயு இணைப்பதற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்கள், பிற ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர் கூறுகையில், `கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது .
ஆனாலும், எதிர் வரக்கூடிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 10 ஆயிரம் குப்பிகள் மருந்து மற்றும் மருத்துவ பிராணவாயு வங்கி இருப்பு வைக்கவும், வெண்டிலட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர் பணி அமர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது` எனத் தெரிவித்தார்.