உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தடுப்பு நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வீடு வீடாகச் சென்று வழங்கப்படும்.
இதனைச் செயல்படுத்தும் விதமாக, ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளின் பணியாளர்கள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக நிவாரண நிதி அளிக்கப்படும். மேற்கூறிய நாள்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும்.
மேற்கூறிய பகுதிகளில் இதுவரை ஏறக்குறைய 78 விழுக்காடு அட்டைதாரர்கள் ஜுன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள். மேலும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்களை இதுவரை பெறாத அட்டைதாரர்கள் ஜூன் 27ஆம் தேதி முதல் சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.