நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் வாரம்தோறும் செவ்வாய்க் கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பருத்தி ஏலத்தைக் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகம் கடந்த மாதம் ரத்து செய்தது.
இதனால் கடந்த 2 வாரங்களாக பருத்தி ஏலம் நடைபெறாத நிலையில் நாளை (ஜூலை 14) செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பருத்தி ஏலம் நடைபெறும் என கூட்டுறவு சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து விற்பனை சங்க நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன் கூறியதாவது, "கடந்த 2 வாரங்களாக பருத்தி ஏலம் நடைபெறாத நிலையில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை விற்பனை செய்யும் விதமாக நாளை (ஜூலை 14) செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி செவ்வாய்க்கிழமை ஏலமும், ஏலத்தில் பருத்தியை விற்பனை செய்த விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா புதன்கிழமையும் நடைபெறும். விவசாயிகள் அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்கவே அடுத்த நாள் பணப்பட்டுவாடா நடைபெறும்.
விவசாயிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்" எனத் தெரிவித்தார்.