திருவள்ளூர் அடுத்த வெங்கல் காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் கரிகளவாக்கம் கிராமத்தில் அண்மையில் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சில வீடுகள் இடிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கரிகளவாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர், அரசு தோப்பு புறம்போக்கு நிலத்தை முறைகேடாக விற்பதாக, வந்த தகவலையடுத்து வீடுகளை இழந்த மக்கள் தலைவரிடம் சென்று தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினர் நீங்கள் யாரும் எங்களுக்கு வாக்களிக்கவில்லை; ஆகையால் உங்களுக்கு இடம் தர முடியாது' எனப் பதில் சொன்னதாகக் கூறப்படுகிறது. வீடுகளை இழந்தவர்கள் அந்த கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் தன்னிச்சையாக சென்று குடிசைகளை அமைக்க முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரடியாக சென்று பொதுமக்களைத் தாக்கியுள்ளனர். மேலும் இந்த விஷயத்தை தூண்டிவிட்டதாக முன்னாள் தலைவர் வீடு மற்றும் அவரது வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதில் மொத்தம் 8 பேர் காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அந்தக் கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோசப் கூறும்போது; 'இங்கு சாலை விரிவாக்கப் பணியால் வீடுகளை இழந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் சென்று முறையிட்டு கேட்டபோது, அவர்கள் மறுத்து விட்டனர்.
இதனைத்தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் குடிசை அமைக்க சென்றதால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
மேலும் இந்த முயற்சிக்கு பின்புறத்தில் தூண்டுதலாக இருந்த முன்னாள் தலைவர் ஜனார்த்தனன் வீட்டையும் அவரது வாகனங்களையும் தாக்கி ரூ.5 லட்சத்திற்கும் மேல்சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய நீதி விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கி, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.