உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
பெரும்பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பொதுமக்கள் தங்களால் ஆன நிதியை கரோனா நிவாரணத்திற்காக வழங்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தன. இதையடுத்து, பல்வேறு கட்சிகளும், நிறுவனங்களும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கிரடாய் எனும் தனியார் நிறுவனத்தின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்த அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கான தங்களது பொது நிவாரண நிதியை வழங்கினர்.
அப்போது, சென்னை கிரடாய் அமைப்பின் தலைவர் டி.பதாம் துகார், செயலாளர் எம். ஆறுமுகம், தேர்வு தலைவர், சிவ குருநாதன், முன்னாள் தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் மற்றும் எஸ்.கே. பீட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.