சேலம் மாநகர் குகை ஸ்ரீரங்கன் தெருவைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிராவிற்கு வெள்ளி வியாபாரம் செய்ய சென்றுவிட்டு உரிய அனுமதி இல்லாமல் சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளார். இதனிடையே சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று நாள்களாகக் கணக்கெடுக்கும் பணியை நடத்திவருகிறது. அப்போது வெள்ளி வியாபாரி உரிய அனுமதியின்றி மகாராஷ்டிரா சென்றுவிட்டு வீடு திரும்பியது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள் வெள்ளி வியாபாரியையும் அவர் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டது. அந்தத் தெருவிலுள்ள 21 நபர்களுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து வெள்ளி வியாபாரி மீது தொற்று பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கன் மற்றும் மூங்கபாடி தெருக்களிலுள்ள 500க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரே தெருவில் 21 பேர் உள்பட சேலம் மாவட்டம் முழுவதும் இன்று 51 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 339ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநகராட்சிப் பகுதிகளில் 60 ஆயிரம் வீடுகளில், கரோனா நோயாளிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது.